| ADDED : நவ 28, 2025 08:07 AM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மதுரை ஏ.ஐ.எம்.எஸ்., மருத்துவ கல்லுாரி பேராசிரியர் டாக்டர் தீபா கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் கோகிலா தலைமை வகித்தார். நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா வரவேற்றார். ரோபோ மூலம் ரோஜா கொடுத்து சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் தங்களுடைய பல்வேறு வகையான கற்றல் படைப்புகளை கொண்டு காட்சிப்படுத்தினர். கடலுக்குச் செல்ல மீனவர்களின் தாகம் தணிக்க உப்பு நீரை நன்னீர் ஆக்குவது, சோலார் மூலம் பால்வெளி மண்டலம் போல் வடிவமைத்தது, மிகக் குறைந்த அளவு தண்ணீரில் மருத்துவ குணமுடைய தோட்டங்கள் மற்றும் பல்வேறு மண் வகைகளை கொண்டு வாழை மரங்கள் வளர்ப்பது, ஏவுகணைகள் பற்றிய புதிய படைப்புகள், உடைந்த மண்பாண்டங்களை கொண்டு உருளை மின்சார விளக்குகள் அமைப்பது. கடலோரத்தில் மீனவர்கள் பாதை மாறி போகாமல் தானியங்கி கலங்கரை விளக்கம் உள்ளிட்ட 247 வகையான படைப்புகளை மாணவர்கள் உருவாக்கியிருந்தனர். விழாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் முத்துக்கண்ணு நன்றி கூறினார்.