உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

ராமநாதபுரம்: புவிசார் குறியீடு பெற்ற ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்குசிறப்பு அஞ்சல் உறையை தென் மண்டல அஞ்சல் துறை இயக்குனர் ஆறுமுகம் வெளியிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உருண்டை வடிவத்தில் விளையும் 'ராம்நாடு 59 சிவப்பு முண்டு மிளகாய்' க்கு 2020 ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனை கவுரவிக்கும் வகையில் ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்த தேசிய அஞ்சல் வார விழாவில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. தென்மண்டல அஞ்சல்துறை இயக்குனர் பி.ஆறுமுகம் முதல் பிரதியை வெளியிட ராமநாதபுரம் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஏ.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.அஞ்சல்துறை இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:அஞ்சல் துறை சார்பில் நாட்டின் சிறந்த நிகழ்வுகளை குறிக்கும் வகையில் ஆண்டுக்கு 10 முதல் 12 தபால் தலைகள் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பொருட்களுக்கு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு, அஞ்சல் உறை என இரு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் முண்டு மிளகாயின் மதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடையும்.நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையில் அதன் விவரம் இடம் பெற்றிருக்கும். முண்டு மிளகாயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அஞ்சல் துறை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அது போல் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை இணையதளம் வழியாக பெற்றுக் கொள்ளலாம்என்றார்.தோட்டக்கலை துணை இயக்குனர் ஏ.ஆறுமுகம் பேசுகையில், முண்டு மிளகாய் வறட்சியான பகுதியில் செழித்து வளரும். ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களை மிளகாய் மண்டலமாக அறிவித்த பின் மிளகாய் உற்பத்தி அதிகரித்துள்ளது. புவிசார் குறியீடு கிடைத்த பின் முண்டு மிளகாய் ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அடுத்த இரு நாட்களில் டில்லியில் நடக்கவுள்ள தோட்டக்கலை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக முண்டு மிளகாய் அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை