ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டின் வவுனியா சிறையில் அடைத்தனர். இதையடுத்து இன்று (டிச., 24) ஸ்டிரைக் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிச., 22 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 480 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்து நாலாபுரறமும் சிதறி ஓடினர். அப்போது தங்கச்சிமடம் ஜோதிபாஸ் என்பவரது படகை மடக்கி பிடித்த இலங்கை வீரர்கள் படகில் இருந்த மீனவர்கள் பிரபாத் 27, சந்தியா 33, ஜேம்ஸ் கெய்டன் 26, கயூஸ்ராஜ் 34, டோஜா 16, அந்தோணி டெல்மேன் 31, ஆக்போநிஜோ 18, மரிய ஆண்டோபெஸ்டன் 19, கோர்பசேவ் 32, மதன்சன் 28, நிமல்சகாயம் 27, ஆனந்த் 20, ஆகியோரை கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்கு பதிந்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் இன்று ஸ்டிரைக் நேற்று சிறையில் அடைக்கப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் இலங்கை சிறையில் தண்டனை கைதிகளாக உள்ள மீனவர்களையும் விடுவிக்காமல் உள்ள படகுகளையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்தித்து இதுகுறித்து முறையிடப்படும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (டிச., 24) மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.