பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை திருக்கல்யாணம், இரவு பட்டணப்பிரவேசம் நடந்தது.நேற்று காலை விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானை தேரில் முன் சென்றனர். தொடர்ந்து பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி சப்பரத்தில் வந்தார். மூன்றாவதாக விசாலாட்சி அம்மன் தனித்தேரில் எழுந்தருளி வந்தார். அனைத்து தேர்களையும் பக்தர்கள் ரத வீதிகளில் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் இரவு ரிஷப வாகனத்தில் சப்தாவர்ணம் நடந்தது. இன்று தீர்த்தவாரி நடத்தப்பட்டு இரவு கொடி இறக்கப்படும். இதனைத் தொடர்ந்து நாளை காலை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பத் திருமஞ்சனம் நடக்கிறது.அதிகாலை 2:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்க உள்ளார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.