உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை அருகே திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு

திருவாடானை அருகே திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கட்டுகுடியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் மற்றும் அரும்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சசிக்குமார் உதவியுடன் கைக்கோளர் ஊருணியின் வடமேற்கில் இரண்டாக உடைந்த ஒரு கல் துாணில் இருந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தார். இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது: கல்வெட்டு 66 இஞ்ச் நீளம், 14 இஞ்ச் அகலம் கொண்ட கல் துாண் மேற்பகுதியில் திரிசூலம், அதன் கீழே 24 வரிகள் கொண்டதாக உள்ளது. இதில் சக ஆண்டு 1579, தமிழ் ஆண்டு யேவிளம்பி, சித்திரை மாதத்தில் சுக்கிரவாரமும், புனர்பூசமும், சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில் ரெகுநாதத் திருமலைச் சேதுபதி காத்த தேவருக்குப்புண்ணியமாக திருவாடானை, ஆடானை நாயகர் கோயில் திருநந்தவனத்துக்காக கட்டுகுடியில் விரைப்பாடாக 50 கலம் மன்னரால் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைப்பதற்குத்தேவைப்படும் நில அளவையை விரைப்பாடு என்பர். இதில் 50 கலம் தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவு நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தானத்தை சந்திர, சூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்துக் கொள்ள மன்னர் கட்டளையிட்டுள்ளார். இந்தப் புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கைக் கரையிலே, காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போவானாகவும் என கல்வெட்டு எச்சரிக்கிறது. இதில் கலம் என்பது 'ள' என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னர் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆங்கில ஆண்டு கி.பி.1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை