பிரேக் பிடிக்காத டவுன் பஸ் மற்றொரு பஸ் மீது மோதல் மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்
உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பயணியர் 25 பேரை ஏற்றிய அரசு டவுன் பஸ் ஆலங்குளம் விலக்கு பகுதியில் சென்றது. அப்போது பிரேக் பிடிக்காமல் ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்துார் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் முதுகுளத்துார் பஸ்சின் பக்கவாட்டுப் பகுதி முழுதும் சேதம் அடைந்தது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.அரசு டவுன் பஸ் டிரைவர் ஆலங்குளம் அருகே மேலச்சீத்தையைச் சேர்ந்த ராமர், 47, என்பவர், உட்பட காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடருது 'பிரேக் பெயிலியர்'
அரசு டவுன் பஸ்கள் ஓட்டை உடைசலான நிலையில், பராமரிப்பின்றி, அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பிறகும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. முறையான பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அடிக்கடி அரசு பஸ்கள் விபத்திற்குள்ளாகின்றன. 'கண்டமான' பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.