பருத்திக்கு விலையின்றி கடனை அடைக்க முடியல.. விவசாயிகள் வேதனை; போராடியும் மழை நிவாரணம் அரசு வழங்கவில்லை
ராமநாதபுரம் : பருத்தி பஞ்சுக்கு விலையின்றி இழப்பு ஏற்பட்டுள்ளது. போராடியும் மழை நிவாரணத்தொகையும் வழங்கவில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். கலெக்டர் வருவதற்கு முன்னதாக கடந்த கூட்டத்தில் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து வாசிக்கப்பட்டது. அப்போது கீழத்துாவலை சேர்ந்த சத்தியமூர்த்தி பருத்தி பஞ்சுக்கு மத்திய அரசு கிலோ ரூ.100 வரை வழங்க அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிலோ ரூ.45க்கு தான் விலை போகிறது. அதிகாரிகள் பருத்தி பஞ்சுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்து தர வேண்டும். நடப்பாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பயிர்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது பரமக்குடியை சேர்ந்த நாகரத்தினம் பேசுகையில், வேளாண் வணிகம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி தரமில்லை எனக்கூறி முறையாக விலை நிர்ணயம் செய்து தருவது இல்லை. காய் பறிப்பு கூலி ரூ.350 வரை கொடுப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்றார். பரமக்குடி தாசில்தார் விவசாயிகளுக்கு பட்டா வழங்க அலைகழிக்கிறார். தன்னிச்சையாக செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களால் வாழ முடியவில்லை. மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளவா என மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு கூச்சலிட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சில விவசாயிகள் கூச்சலிட்டனர். விலை நிர்ணயம் தொடர்பாக கலெக்டர் வந்த பிறகு பேசி முடிவு எடுப்போம். பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் சமரசம் செய்தார். * தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் பாக்கியநாதன், மிளகாய், நெல் கடந்த அக்., டிச., மழையில் சேதமடைந்தது. இதுவரை மழை நிவாரணம் தரவில்லை. ரயில் மறியல் போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. எப்போது நிவாரணம் கிடைக்கும்.* கலெக்டர்: வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ளோம். மழை நிவாரணம் விரைவில் வந்து விடும். குடிமராமத்து பணி அல்லது தன்னார்வலர் மூலம் கண்மாய்கள் மழைக்காலத்திற்குள் சீரமைக்க பட உள்ளன. அம்மாதிரியான கோரிக்கைளை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தெரிவிக்கலாம். தொடர்ந்து வட்டார வாரிய பேசும் போது ஆண்டுதோறும் மழைப்பொழிவு விபரம் கடல் பகுதியில் பெய்ததை வைத்து கணக்கெடுக்கின்றனர். தாலுகா வாரியாக மழை மானிகள் வைக்க வேண்டும். நுாறு நாள் திட்ட பணியாளர்கள் மூலம் குளங்கள், கண்மாய், ஊருணியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மான், காட்டுபன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும். கால்வாய், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விளை நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்ஓயர்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக விளை நிலங்களில் மின் கம்பங்கள் சரி செய்தல் அதேபோல் உயர் அழுத்த மின் வயர்கள் தாழ்வாக செல்லும் இடங்களில் விரைந்து சரி செய்து தரப்படும் என கலெக்டர் தெரிவித்தார். வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) பாஸ்கரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுகி, கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.--