ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 இடங்களில் இன்று முதல் சிலைகள் விஜர்சன ஊர்வலம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் நிலையில் இன்று(செப்.8) முதல் சிலைகள் விஜர்சன ஊர்வலங்கள் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 348 இடங்களில் விநாயகர்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விளையாட்டு போட்டிகள்நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்தனர். இன்று(செப்.8) விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையிலும், பரமக்குடியில் மாநில செயலாளர் மனோகரன் தலைமையிலும் நடக்கிறது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளிலும் விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. நாளை(செப்.9) ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயகூத்தன் தலைமையில் ஊர்வலம் நடக்கிறது. தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர்ராமமூர்த்தி செய்து வருகிறார். விநாயகர் சிலை ஊர்வலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.