தோரையன் வலசையில் முளைப்பாரி குடிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள் கிராம மக்கள் புகார்
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தோரையன் வலசையில் முளைக்கட்டு உற்ஸவ விழாவை முன்னிட்டு முளைப்பாரி வளர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய ஓலைக்குடிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சி தோரையன்வலசையில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி உற்ஸவத்தை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயில் அருகே உள்ள இடத்தில் முளைப்பாரி வளர்ப்பதற்காக பெரிய குடில் அமைத்திருந்தனர்.அவற்றில் 200க்கும் மேற்பட்ட பாரி ஓடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு மர்ம நபர்கள் முளைப்பாரி வளர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தென்னை ஓலையால் வேயப்பட்டிருந்த குடிலை கடப்பாரை, அரிவாள் போன்றவற்றால் சேதப்படுத்தி முழுவதும் இடித்து சென்றுள்ளனர். இதையறிந்து வேதனையடைந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் முளைப்பாரி வளர்ப்பு குடிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தோரையன் வலசை கிராம தலைவர் பாலு, நேற்று காலை திருப்புல்லாணி போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.