உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் படிவம் வழங்கும் பணி: திருவாடானை முதலிடம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் படிவம் வழங்கும் பணி: திருவாடானை முதலிடம்

திருவாடானை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கும் பணியில் திருவாடானை தொகுதியில் 90 சதவீதம் வழங்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவ.,4 ல் துவங்கியது. திருவாடானை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 520 ஆண்கள், 1 லட்சத்து 52 ஆயிரத்து 106 பெண்கள், 25 திருநங்கைகள் என 3 லட்சத்து 2651 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்காக செல்லும் பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்கள் ஆர்வமாக படிவங்களை வாங்கினர். ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய இரு படிவங்கள் வழங்கப்பட்டன. படிவம் வழங்கும் போது அதற்கான பிரத்யேக செயலியில் படிவத்தில் இருந்த கியூ.ஆர்.,கோடை ஸ்கேன் செய்து வழங்கியதாக பதிவேற்றம் செய்தனர். நேற்று முன்தினம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இரவு 8:00 மணிக்கு திருவாடானை அருகே கல்லுார், பாரதிநகரில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பட்டியல் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம உதவியாளர் பெரியசாமியை 90 சதவீதம் வரை வாக்காளர் பட்டியல் வழங்கியதற்காக பாராட்டினார். இது குறித்து வாக்காளர் பதிவு உதவி அலுவலர் ஆண்டி கூறுகையில், திருவாடானை தாலுகாவில் வாக்காளர் பட்டியல் வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்து முதலிடத்தில் உள்ளது. வெளியூர் சென்றவர்கள், முகவரி மாறி சென்றவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் பூர்த்தி செய்யபட்ட படிவங்களை வாங்கும் பணியும் துவங்கியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ