உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குக்கிராமங்களுக்கும் மினி பஸ் சேவை அரசே இயக்குமா; அரசு சலுகை வழங்கியும் பலனில்லை

குக்கிராமங்களுக்கும் மினி பஸ் சேவை அரசே இயக்குமா; அரசு சலுகை வழங்கியும் பலனில்லை

ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் குக்கிராமங்களுக்கும் மினி பஸ் சேவை அளிக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதற்கு தனியார் நிறுவனங்கள் போதிய வரவேற்பு காட்டாததால் மினி பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசே மினி பஸ்களை இயக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் குறைந்த போக்குவரத்து சேவை உள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த தி.மு.க., ஆட்சியில் 1997 ல் மினி பஸ் திட்டம் துவக்கப்பட்டது. அதன் பின் அரசு விரிவான மினி பஸ் திட்டத்தை 2024ல் அறிமுகப்படுத்தியது.இதன்படி போதிய சாலை வசதி இல்லாத கிராமங்கள், குறுகலான பாதை கொண்ட ஊர்கள், 100க்கும் குறைவான வீடுகள் உள்ள கிராமங்கள், சிறிய மற்றும் குக்கிராமங்களுக்கும் 65 சதவீதம் பஸ் சேவை இல்லாத பகுதிகளில் 25 கி.மீ., வரை வழித்தடத்தில் தனியார் நிறுவனங்கள் மினி பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் தனியார் நிறுவனங்களுக்கு மினி பஸ் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் லாபம் கருதி முக்கிய வழித்தடத்தில் மட்டும் மினி பஸ்களை இயக்க முன்வருகின்றன. அரசின் அறிவிப்பின் படி மொத்தமுள்ள தொலைவில் 65 சதவீதம் வழித்தடம் இதற்கு முன்பு பேருந்து இயக்கப்படாமல் இருக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலான கிராமங்கள் நகரில் இருந்து தொலை துாரத்திலும், சில கிராமங்களில் பஸ் செல்வதற்கான போதிய வழித்தடம் இல்லாததாலும் தனியார் நிறுவனங்கள் அந்த வழித்தடத்தில் மினி பஸ் இயக்க தயங்குகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க ஆணை வெளியிடப்பட்டது. இதில் 65 சதவீதம் வழித்தடங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 19 வழித்தடங்களில் இயக்க விண்ணப்பம் அளித்துள்ளனர் சென்னை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் 146 மினி பஸ்களில் 56 மினி பஸ்கள் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைந்து இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் குக்கிராமங்களுக்கு தற்போது வரை மினி பஸ் சேவை எட்டா கனியாகவே இருந்து வருகிறது. சி.ஐ.டி.யு., காரைக்குடி மண்டல பொதுச் செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் மினி பஸ்கள் பெரும்பாலும் நகர் பகுதிகளில் இயக்குவதற்கு மட்டும் விருப்பம் தெரிவிக்கின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் இயக்கும் போது லாபம் அடைய முடியும். அதே போல் மினி பஸ்களுக்கு என குறிப்பிட்ட நேரம் இல்லை. இதனால் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. எனவே சென்னை போன்று அனைத்து மாவட்டங்களிலும் பஸ் வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு அரசே மினி பஸ்களை இயக்க வேண்டும் என்றார். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ