போலீஸ் ஸ்டேஷனில் ரகளை தொண்டியில் பெண் கைது
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை செய்து மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.தொண்டி சிவன் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் சபீனா 27. இவரது நகை, பணம் திருட்டு போனது குறித்து மூன்று நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு தொண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் சபீனா.'மூன்று நாட்களாகியும் இன்னமும் கண்டுபிடிக்க வில்லை. நான் யார் தெரியுமா. பிரபல யுடியூப் சேனல் வைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் ஒரு பிரியாணி கடை முதலாளியையும், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரையும் கதற விட்டேன். என் பின்னால் அனைத்து ஊடகங்களும் உள்ளன.என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது. அதே போல் உங்களை என்ன பண்றேன்னு பாருங்கள்,' என்று பேசியபடி மேஜையில் இருந்த வழக்கு பைல்கள் மற்றும் நோட்டுகளை துாக்கி வீசினார். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சபீனாவை, எஸ்.ஐ., விஷ்ணு கைது செய்தார்.