| ADDED : டிச 05, 2025 06:25 AM
ஆர்.எஸ்.மங்கலம்: தி.மு.க.,வின் 311 வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்.எஸ்.மங்கலத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். தமிழகத்தில் 2009 ம் ஆண்டு ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 8370 ரூபாய் என்ற அடிப்படை சம்பளம், 2009 ம் ஆண்டு ஜூன் 1 முதல் நியமிக்கப்பட்டவர்களுக்கு 5200 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரே வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு வேறு வேறு அடிப்படை ஊதியங்களை அரசு வழங்குவது ஆசிரியர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க., 311 வது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. விரக்தி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். நேற்று ஆர்.எஸ். மங்கலத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க மாவட்ட தலைவர் வினோத் பாபு தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை பட்டை அணிந்து ஆசிரியர்கள் பணிக்குச் சென்றனர். கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் டிச.,24 முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். வட்டார செயலாளர் பால்ராஜ், மகளிரணி செயலாளர் அர்ச்சனா தேவி உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.