விளையாட்டு மைதானம் அமைக்க நெல்வாய் கிராமத்தினர் எதிர்பார்ப்பு
நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், நெல்வாய் ஊராட்சியில் நெல்வாய் கண்டிகை, எஸ்.கொளத்துார், சிறிய தென்னல், பெரிய தென்னல் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் வசதி இல்லை.இதனால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தனியாருக்கு சொந்தமான நெல் வயல் மற்றும் ஏரிகளில் விளையாடி வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில், தகராறு மற்றும் கைகலப்பு உள்ளிட்டவை அடிக்கடி அரங்கேறி வருகின்றன.இதை தவிர்க்க, நெல்வாய் கிராமத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.