போன் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை
ராணிப்பேட்டை:ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல்போன் வெளிச்சத்தில், நோயாளிக்கு சிகிச்சை அளித்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை நாகரத்தினம், 45; மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று முன்தினம் மாலை பழுது ஏற்பட்டதால், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு, லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, மின்சாரம் இல்லாததால், ஜெனரேட்டரை இயக்காமல், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், நாகரத்தினத்திற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள், பொன்னை சாலையில் நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக நாகரத்தினம், வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மறியலில் ஈடுபட்டவர்களிடம், ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் பேச்சு நடத்தி மறியலை கைவிட செய்தனர்.