உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூலி குறைப்பை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்

கூலி குறைப்பை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்

ஆத்தூர் : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைந்த கூலி வழங்கியதை கண்டித்து, ஆத்தூர் அருகே தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் அருகே, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சொக்கநாதபுரம் பஞ்சாயத்து ஏரி, நீரோடை உள்ளிட்ட பகுதியில் தூர் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஏரி தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 50 ரூபாய் வீதம் கூலி வழங்குவதாக பஞ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் அதிர்ச்சிக்குள்ளான தொழிலாளர்கள், கடந்த வாரம் 60 முதல் 65 ரூபாய் கூலி வழங்கிய நிலையில், 50 ரூபாயாக கூலி குறைத்துள்ளதை கண்டித்து வாக்குவாதம் செய்தனர்.தொடர்ந்து, குறைந்த கூலி வழங்குவதை கண்டித்து, மாலை 5 மணியளவில், ஆத்தூர்- ராசிபுரம் மாநில சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த ஆத்தூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூலி தொகை குறைக்காமல் வழங்குவதாக உறுதியளித்ததால், தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஆத்தூர்- ராசிபுரம் மாநில சாலையில், அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை