மேட்டூர்: சாம்பல் ஏரிக்கு செல்லும் ரோட்டை சீரமைப்பதால், ஈரச்சாம்பல் அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், லோடு ஏற்றாமல், 200 லாரிகள் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நாள்தோறும், 12 முதல், 14 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் உலர் சாம்பல் ஷைலோ மூலம் லாரிகளில் ஏற்றப்படுகிறது. ஈரச்சாம்பல் அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள இரு ஏரிகளில் தேக்கி வைக்கப்படுகிறது.
இதில், பெரிய சாம்பல் ஏரியில் இருந்து தினமும், 200 லாரிகளில் ஈரச்சாம்பல் ஏற்றப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதில், பெரிய சாம்பல் ஏரிக்கு செல்லும் ரோட்டை சீரமைக்ககோரி சில மாதத்துக்கு முன் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பெரிய சாம்பல் ஏரிக்கு செல்லும் ரோடு சீரமைக்கும் பணி, ஒரு வாரமாக நடக்கிறது. அதனால், ஈரச்சாம்பல் ஏற்றும் லாரிகள் அனைத்தும் சிறிய சாம்பல் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. சிறிய சாம்பல் ஏரி செல்லும் ரோடு பழுதடைந்துள்ளதாலும், ஏரியின் பரப்பு குறைவு என்பதாலும் நாள்தோறும், 40 லாரிகளில் மட்டுமே சாம்பல் ஏற்ற முடியும்.
எனவே, தினமும், 200 லாரிகளில் சாம்பல் லோடு ஏற்றிய நிலையில், ஒரு வாரமாக தினமும், 40 லாரிகளில் மட்டுமே சாம்பல் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், தினமும் லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். பிரச்னை தவிர்க்க நேற்று லாரி உரிமையாளர்கள் ஈரச்சாம்பல் ஏற்ற மறுத்து அனைத்து லாரிகளையும் அனல்மின் நிலையம் அருகில் ரோட்டோரம் நிறுத்தி விட்டனர். பெரிய ஏரிக்கு செல்லும் ரோடு சீரமைப்பு பணி முடிந்த பின்பே ஈரச்சாம்பல் ஏற்றும் பணி சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் மாது கூறியதாவது: லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது பெரிய ஏரிக்கு செல்லும் ரோட்டில் சீரமைப்பு பணி நடக்கிறது. அதனால், சிறிய ஏரியில் தேங்கியள்ள ஈரசாம்பலை லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இன்னும் இருநாட்களில் ரோடு போடும் பணி முடிந்து விடும். அதன் பின்பு வழக்கம்போல தினமும் ஏராளமான லாரிகள் ஈரச்சாம்பலை ஏற்றி செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.