| ADDED : ஜூன் 16, 2024 06:48 AM
ஓமலுார் : ஓமலுார் அரசு மருத்துவமனையில், 2018 செப்., 10ல், 5.16 கோடி ரூபாய் மதிப்பில் தரைத்தளத்துடன் இரு மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு பிரசவ வார்டாக பயன்பாட்டில் உள்ளது. அங்கு தினமும், 300 முதல், 500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மருத்துவமனை உள்ளதால், விபத்தில் சிக்குவோர் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்கு சேலம் கொண்டு செல்லப் படுகின்றனர்.இந்நிலையில் அங்குள்ள மற்ற பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, 3 தளங்களில் நவீன வசதிகளுடன் மற்றொரு கட்டடம் கட்ட இடம் உள்ளதா என, சென்னை மருத்துவ கட்டடங்கள், பராமரிப்பு இணை இயக்குனர் செழியன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து, அதன் முதன்மை மருத்துவ அலுவலர் ெஹலன்குமாரிடம் கேட்டறிந்தார்.இதுகுறித்து செழியன் கூறுகையில், ''மருத்துவமனைக்கு தேவையான கட்டட வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவ துறை செயலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின் நிதி ஒப்புதலுக்கு அரசிடம் வழங்கப்படும். விரைவில் அதற்கான பணி நடக்கும்,'' என்றார்.