| ADDED : ஜூன் 27, 2024 04:08 AM
சேலம்: உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள், போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர், போதை பழக்கத்துக்கு எதிரான வாசகங்களை ஏந்திச்சென்றனர். பேரணி திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை வழியே மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அரசு கலைக்கல்லுாரி, கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதேபோல் தலைவாசல் அருகே புத்துாரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் முருகவேள் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், அதன் தலைவர் அன்பழகன் தலைமையில் செயல் அலுவலர் விழிச்செல்வன் முன்னிலையில் கவுன்சிலர்கள், பணியாளர்கள், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மக்கள் கூடும் இடங்களில், 'போதை பொருட்கள், விஷ சாராயம் விற்றால், மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறையின் இலவச புகார் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி பேனர் வைக்கப்பட்டுள்ளது.