ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை அணை கரையோர விவசாயிகள் கலக்கம்
மேட்டூர்: அணை கரையோர கிராமத்தில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்து கொன்றதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர் கிராமம், மேட்டூர் அணை கரையோரம் உள்ளது. அங்கு விவசாயி சுரேஷ், 42, அவரது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று மாலை சுரேஷ், செம்மறியாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வெள்ளாடுகளை தோட்டம் வெளியே மரங்களில் கட்டிப்போட்டார். இரவு, 8:00 மணிக்கு, தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஒரு வெள்ளாட்டை கடித்து கொன்றது.அப்பகுதி விவசாயிகள் பார்த்து கூச்சலிட, ஆட்டை விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இதனால் விவசாயிகள், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் அருகே பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி வினோத், 45, தோட்டத்தில் சிறுத்தை ஓடியதை, பார்த்து அதிர்ச்சியடைந்து மக்களிடம் தெரிவித்தார்.ஏற்கனவே கடந்த, 26ல் சாம்பள்ளி ஊராட்சி கோம்பைக்காட்டில் கருப்பாயி என்பவரின் செம்மறியாட்டை சிறுத்தை கழுத்தை கடித்து கொன்றதாக, மக்கள் குற்றம்சாட்டினர். அப்போது வனத்துறையினர், 4 கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தை பதிவாகவில்லை. அங்கிருந்து தற்போது வெள்ளகரட்டூரில் இடம் பெயர்ந்துவிட்டதாக, மக்கள் கூறினர்.