உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலக்கடலை விதை நேர்த்தி: விவசாயிகளுக்கு விளக்கம்

நிலக்கடலை விதை நேர்த்தி: விவசாயிகளுக்கு விளக்கம்

வீரபாண்டி : நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரியங்கா(பொ) அறிக்கை: வீரபாண்டி வட்டாரத்தில் தற்போது பரவலாக நிலக்கடலை விதைப்பு பணி நடக்கிறது. இவை அனைத்து பருவங்களுக்கு ஏற்றபடி தாங்கி வளரவும், அதிக மகசூல் பெறவும், விதை நேர்த்தி செய்வது அவசியம். நிலக்கடலையில் விதை, மண் மூலம் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி நோய்களை கட்டுப்படுத்த பயிர் எண்ணிக்கையை சராசரியாக பராமரிக்க வேண்டும். உயிரியல் பூஞ்சாணக்கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தாக, 'டிரைக்கோடெர்மா விரிடி' மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க, 'ரைசோபியம்' நுண்ணுயிரியால் விதை நேர்த்தி செய்ய வேண்டும். 'டிரைக்கோடெர்மா விரிடி' பூஞ்சாணக்கொல்லி ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். விதைப்புக்கு முன் ஈரப்படுத்தி பூஞ்சாணத்தை அதில் துாவி கலக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் 'திரம்' அல்லது 'மேன்கோசப்' மருந்தை கொண்டு விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் நிழலில் காய வைத்து விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.ஒரு ஹெக்டோருக்கு தேவையான விதைகளை, 125 மி.லி., 'திரவ ரைசோபியம்', 125 மி.லி., 'திரவ பாஸ்போ பாக்டீரியா' கொண்டு விதை நேர்த்தி செய்து, 30 நிமிடங்களில் நிழலில் காய வைத்து விதைக்க வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ