| ADDED : ஜூலை 06, 2024 02:46 AM
மேட்டூர்:சேலம் மாவட்டம், மேச்சேரி டவுன் பஞ்சாயத்து தலைவி சுமதி. இவரது கணவர், தி.மு.க.,வை சேர்ந்த, மேச்சேரி ஒன்றிய செயலர் சீனிவாசபெருமாள். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கோபால். இவர் அங்கு ஓராண்டாக பணிபுரிகிறார். இவரிடம் சமீபத்தில் சில கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து கடைகளை ஏலம் விட கோரிக்கை விடுத்தனர்.அப்போது கவுன்சிலர்கள் கூறியதாவது:பஸ் ஸ்டாண்ட் கடைகள், சைக்கிள் நிறுத்தும் இடம், பத்ரகாளியம்மன் கோயில் அருகே மற்றும் ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள கடைகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏலம் விடப்படவில்லை. அதற்கு பதில் ஓராண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மட்டும், 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து கடைகளை ஏலம் விட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, கடைகளை ஏலம் விடுவதாக அறிவித்த செயல் அலுவலர், பின் ரத்து செய்துவிட்டார். மேலும் கடை உரிமையாளர்களே, அவரவர் குடும்பத்தினரை ஏல தொகை நிர்ணயித்து காசோலை தயார் செய்துஉள்ளனர். கடைகளை ஏலம் விடுவதில் நடந்த குளறுபடி தொடர்பாக,உள்ளாட்சி துறை அமைச்சர், கலெக்டர் கவனத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து கடந்த 3ல் கோபாலை, 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பி.என்.பட்டி செயல் அலுவலர் ரேணுகாவுக்கு, கூடுதல் பொறுப்பாக மேச்சேரி வழங்கப்பட்டுள்ளது.