| ADDED : ஆக 01, 2024 11:33 PM
சேலம்:தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை குறிப்பிட்ட எடையில் வழங்கப்படுகின்றன. அதில், பாமாயில் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது. மீதி பொருட்களை கார்டுதாரர்கள் பை எடுத்து வந்து வாங்குகின்றனர்.இதனால், எடை குறைவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் எழுகிறது. கிடங்குகளில் இருந்து எடை குறைவாக உணவு பொருட்களை மூட்டைகளில் அனுப்புவதாக ஊழியர்களும் புகார் கூறுகின்றனர்.இதற்கு தீர்வு காண ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்க, அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, பாக்கெட்டில் அடைத்து விற்க அரசு முடிவு செய்து, 234 சட்டசபை தொகுதிக்கும், தலா ஒரு ரேஷன் கடையில் பாக்கெட் பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.இதற்கான சோதனை முயற்சியாக, சேலம் மாவட்டம், சேலம், ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு கடையில் ரேஷன் பொருட்கள், 1 கிலோ, 2 கிலோ எடை பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, சட்டசபை தொகுதி வாரியாக திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.