இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றுப்பகுதிகளில் தெவத்திருவிழா நடந்து வருவதால், கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து நேற்று அதிகரித்து, 2.70 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.கொங்கணாபுரம், ஜலகண்டபுரம், இருப்பாளி, இடைப்பாடி, சித்துார் உள்ளிட்ட பகுதிகளில் குலதெய்வங்களின் தெவத்திருவிழா, கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. இதனால் கொங்கணாபுரத்தில் உள்ள வாரச்சந்தைக்கு, ஆடுகளை வாங்க நேற்று ஏராளமான வியாபாரிகளும், மக்களும் வந்தனர். மொத்தம், 3,650 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடையுள்ள ஆடு ஒன்று சராசரியாக, 6,500 ரூபாயிலிருந்து, 6,800 ரூபாய் வரை விற்பனையானது.இது குறித்து, சேலம் மாவட்ட ஆட்டு வியாபாரிகள் சங்க தலைவர் பார்த்தசாரதி கூறுகையில்,'' இப்பகுதிகளில் தெவத்திருவிழா அதிகளவில் நடந்து வருகிறது. அதனால், கடந்த வாரத்தை போன்று நேற்றும், சந்தைக்கு அதிகளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 3,650 ஆடுகள், இரண்டு கோடியே, 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது,'' என்றார்.