ஓமலுார்;இடைப்பாடி தொகுதியில், அ.தி.மு.க.,வேட்பாளர் விக்னேஷ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க.,வேட்பாளர் விக்னேஷ் நேற்று, இடைப்பாடி தொகுதியில் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் பிரசாரம் மேற்கொண்டார். ஆவணி டவுன் பஞ்சாயத்து பகுதியில் திரளான மக்கள் பங்கேற்று மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து, வேட்பாளர் விக்னேஷ்க்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தாதாபுரம், வேம்பனேரி, செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி, பங்கநாடு ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாக சென்று விக்னேஷ் ஓட்டு சேகரித்தார்.பெண்கள், முதியோர் ஆகியோரின் காலில் விழுந்து இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்த வேட்பாளர் விக்னேஷ் பேசியதாவது:இ.பி.எஸ்.,மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நான், உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருப்பேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன். என்னுடைய பணியை முழுமையாக உங்களுக்காக அர்ப்பணிப்பேன். இரட்டை இலைக்கு ஓட்டளித்து அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, உங்கள் பொற்பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, ஆடையூர், சித்துார், பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, நெடுங்குளம் ஆகிய ஊராட்சிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். விக்னேஷுக்கு ஆதரவாக, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், இடைப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், வடக்கு ஒன்றியச் செயலாளர் மாதேஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தே.மு.தி.க., மாவட்ட செயலர் சுரேஸ்பாபு மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.