உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலம்

சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலம்

ஏற்காடு:சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.சேலம் மாவட்டம், ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், மலை உச்சியில் சேர்வராயன் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 4,500 அடி உயரத்தில் உள்ள இக்கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தீபாராதனை, சுவாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மதியம், 2:15 மணிக்கு, தேரில் சேர்வராய பெருமாள், காவேரியம்மாள் சுவாமியை எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து தேரோட்டம் நடந்தது. உள்ளூர் பக்தர்கள், மக்கள், வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சுற்றுவட்டார மலை கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சுவாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபட்டனர்.தேங்காய்கள், சில்லரை காசுகள், காபி கொட்டைகள், மிளகு, கல் உப்பு ஆகியவற்றையும் பக்தர்கள் வாரி இறைத்தனர். அப்போது ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். இதில், 67 மலை கிராமங்களில் இருந்து ஏராளமான மலைவாழ் மக்கள், சேர்வராயன், காவேரியம்மன் சுவாமிகளை தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் சுற்றி மாலை, 5:10 மணிக்கு மீண்டும் தேர் கோவிலை அடைந்தது.போக்குவரத்து துறை மூலம் மக்கள் கோவிலுக்கு சென்று வர ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சேர்வராயன் கோவில் மலைப்பாதையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோவில் திருவிழாவையொட்டி, காபி தோட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி