மும்பையில் தந்தையை கொன்று ஜாமினில் வந்த மகன் தற்கொலை
சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையம் எட்டிகுட்டப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப்குமார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் துாங்க சென்றார். நேற்று காலை, நீண்ட நேரமாகியும் எழவில்லை. அவரது தாய் ராணி, அவரது அறைக்கு சென்றுபார்த்தபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த, 2015ல் பிரதீப்குமார் மும்பையில் தங்கி பணியாற்றியபோது, அவரை பார்க்க, தந்தை முருகேசன் சென்றிருந்தார். அப்போது, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு தந்தையை, பிரதீப்குமார் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் பிரதீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின் கடந்த டிசம்பரில் ஜாமினில் வந்த அவர், சேலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.