ஏற்காடு:ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர், செல்லப்பிராணிகள் கண்காட்சியை பார்த்து குதுாகலம் அடைந்தனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 47வது கோடை விழா, மலர் கண்காட்சி கடந்த, 22ல் தொடங்கியது. 4ம் நாளான நேற்று, சந்தைப்பேட்டை வணிக வளாகம் அருகே கால்நடை பராமரிப்பு துறை சார்பில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் கண்காட்சி நடந்தது. ஆர்.டி.ஓ.,க்களான ஆத்துார் பிரியதர்ஷினி, சங்ககிரி லோகநாயகி, சேலம் துணை கலெக்டர் மையிலி தலைமை வகித்தனர்.கண்காட்சியில் லாப்ராடர் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், பக், சைபீரிய அசுக்கி, ஒயிட் டெரியர், கிரேட் டேன், கோல்டன் ரெட்ரீவர் போன்ற வெளி நாட்டின நாய்கள் பங்கேற்க வைத்தனர். குதிரை, பூனை, பல்வேறு வகை பறவைகளையும் அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். சுற்றுலா பயணியர் கண்டுகளித்தனர்.சேலம் மாநகர போலீஸ் துறை, எஸ்.பி., அலுவலகம், ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய சிறைச்சாலையில் பயன்படுத்தும் நாய்கள், போலீசார் கட்டளைப்படி பல்வேறு சாகசங்களை செய்து காட்டின. மோப்பம் பிடித்தல், வெடிபொருட்களை கண்டுபிடித்தல், தொலைவில் உள்ள பொருட்களை தேடி எடுத்தல் உள்ளிட்டவற்றை செய்ததோடு, கட்டளைக்கு கட்டுப்பட்டு அமருதல், காலை துாக்குதல், அமைதியாக நிற்பது, சத்தம் எழுப்புதல் உள்ளிட்டவற்றை நாய்கள் செய்தது, சுற்றுலா பயணியரை ரசிக்க வைத்தது. மக்களில் பலர், வீடுகளில் வளர்த்து வரும் நாய்களை கொண்டு வந்திருந்தனர். கண்காட்சியில் நாய்கள் இனம் வாரியாக வரவழைத்து மைதானத்தை சுற்றி அழைத்து வர செய்து, அதன் நடவடிக்கைகளை கண்காணித்து சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்தனர்.சேலத்தை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு சொந்தமான லாப்ரடர், சேலம் எஸ்.பி., அலுவலகத்தை சேர்ந்த ஜெர்மன் ெஷப்பர்ட், சேலம் மாநகர போலீசை சேர்ந்த டாபர்மேன், ஏற்காட்டை சேர்ந்த அந்தோணியின் பக் நாய், ஏற்காட்டை சேர்ந்த பிரவீனின் சைபீரிய அசுக்கி, சேலம், தாதகாகப்பட்டியை சேர்ந்த மதன்ராஜின், ஒயிட் டெரியன், சேலம் ஆர்.பி.எப்.,க்கு சொந்தமான பெல்ஜியம் ஷெப்பர்ட் நாய்கள், முதல் பரிசுகளை பெற்றன. மேலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை, கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிராஜூக்கு சொந்தமான கிரேட் டேன் நாய் பெற்றது. பின் அனைத்து கால்நடைகளுக்கும் சிறப்பு பரிசு, கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது.கடந்த, 3 நாட்களை விட நேற்று, மலர் கண்காட்சியை காண ஏராளமானோர் குவிந்தனர். அதேபோல் படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணியர் அதிகளவில் காணப்பட்டனர்.இன்று என்ன?இன்று காலை, 6:30 மணிக்கு சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்து குண்டூர் வழியே ஏற்காடு வரை மலையேறும் போட்டி நடக்கிறது. ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை சார்பில் ஏற்காடு ஏரி பூங்காவில் குழந்தைகளுக்கு தளிர்நடை போட்டி நடக்கிறது.போக்குவரத்து நெரிசல்நேற்று காலை ஒரே நேரத்தில் அதிகளவில் சுற்றுலா பயணியர், பைக், கார்களில் ஏற்காட்டுக்கு வந்தனர். இதனால் மலைப்பாதை, ஒண்டிக்கடை ரவுண்டானா, படகு இல்ல சாலை, அண்ணா பூங்கா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அச்சாலைகளில் சுற்றுலா பயணியரின் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடியே சென்றன. மதியம், 12:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது. சீரமைக்க, போலீசார் திணறினர். பின் ஏற்காடு வந்து செல்லும் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு, ஏற்காடு மலைப்பாதையை, இரு வழிச்சாலையாக மாற்றினர். ஒரே சாலையில் வாகனங்கள் சென்று வந்ததால், மீண்டும் ஏற்காட்டின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் சீரமைக்க போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஞாயிறான இன்று, வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணியர் வருவர் என்பதால், காலை முதலே மலைப்பாதையை ஒருவழி பாதையாக மாற்றிவிட்டால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.