உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 16 மாவட்டத்தில் சித்த மருத்துவ அலுவலர் இல்லை ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை

16 மாவட்டத்தில் சித்த மருத்துவ அலுவலர் இல்லை ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில், 16 மாவட்டங்களில் சித்த மருத்துவ அலுவலர்கள் இல்லாததால், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள், 950 பேர் பதவி உயர்வு கேட்டு, 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில், அலோபதி மற்றும் பல் மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல, உதவி சித்த மருத்துவ அலுவலர்களுக்கும் காலமுறை பதவி உயர்வு வழங்கும்படி, 2022 டிச.,1ல், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இரு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறையில், அதற்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக, உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். உதவி சித்த மருத்துவ அலுவலர் என அழைப்பதை, இனி உதவி என்பதை நீக்கி, 'சித்த மருத்துவ அலுவலர்' பணியிடம் உருவாக்க வேண்டும் என்பதே, அவர்களின் பிரதான கோரிக்கை.எட்டு ஆண்டு பணி நிறைவு செய்தவருக்கு, முதுநிலை சித்த மருத்துவ அலுவலர், 15 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு, குடிமை சித்த மருத்துவ அலுவலர், 17 ஆண்டு பணிநிறைவு செய்தவருக்கு, சிறப்பு சித்த மருத்துவ அலுவலர், 20 ஆண்டு நிறைவு செய்தவருக்கு முதன்மை சித்த மருத்துவ அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால், பதவி உயர்வு இல்லாததால், அதற்கேற்ப ஊதிய உயர்வும் பெற முடியாத அவலம் தொடர்கிறது. கல்லுாரிகளில் உதவி பேராசிரியரை, விரிவுரையாளர் என்றும், இணை பேராசிரியரை, 'ரீடர்' என அழைப்பது, கலை கல்லுாரிகளுக்கு பொருந்துமே தவிர, சித்த மருத்துவ கல்லுாரிகளுக்கு பொருந்தாது என்பதை அரசு உணர வேண்டும்.எனவே தகுதிக்கு ஏற்ப உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் என்றே அழைக்கப்பட வேண்டும். அத்துடன், பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற, 25 பேருக்கு இதுவரை ஊதியம் அளிக்கப்படவில்லை. அதேபோல, பட்ட மேற்படிப்பு சித்த மருத்துவ அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய இரு ஊக்கத்தொகை, 2010க்கு பிறகு வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்டோர் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில், 38 மாவட்டங்களில், 22ல் மட்டுமே மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் உள்ளனர். நாமக்கல், திருவள்ளுர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, பெரம்பலுார், அரியலுார், கரூர் உள்பட, 16 மாவட்டங்களில் சித்த மருத்துவ அலுவலர் பணியிடம் உருவாக்கப்படவே இல்லை. அதனால் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த சித்த மருத்துவ அலுவலர்கள், கூடுதலாக, 16 மாவட்ட பணிகளை மேற்கொள்வதால், திறம்பட செயல்பட முடியாத நிலை உள்ளது. அத்துடன், மருந்து ஆய்வாளர் பணியையும், மாவட்ட சித்த மருத்துவர்கள் மேற்கொள்வதால், அதற்கான வாகன வசதி இல்லாதது போன்ற பாதிப்பால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர் சங்க மாநில செயலர் தமிழ்கனி கூறுகையில்,''நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் விஜயலட்சுமி தலைமையில், அவரது அலுவலகத்தில் கடந்த அக்.,8ல், பேச்சுவார்த்தை நடந்தது. வழக்கு தொடர்ந்த சித்த மருத்துவ அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, நீதிமன்ற தீர்ப்பு மற்றும் கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. இனியாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ