மேட்டூர்: டெல்டாவில், 22,774 ஏக்கரில் சம்பா பயிரை கருகாமல் தடுக்க மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் வினாடிக்கு, 6,000 கனஅடி நீர்திறக்கப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் வறட்சியால் நேற்று மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 107 கனஅடியாக சரிந்தது.அணை நீர்மட்டம் நேற்று, 70.42 அடி, நீர்இருப்பு, 33.06 டி.எம்.சி.,யாக இருந்தது. டெல்டாவில் நாகை மாவட்டத்தில், 18,059 ஏக்கர், திருவாரூரில், 4,715 ஏக்கர் என மொத்தம், 22,774 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா பயிர் வறட்சியால் கருக துவங்கியது.அதற்கு நீர்திறக்க டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த பயிர்களை கருகாமல் தடுக்க மேட்டூர் அணையில் இருந்து, 2 டி.எம்.சி., நீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.நேற்று மாலை, 6:00 மணிக்கு மேட்டூர் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்களில் வழியாக பாசனத்துக்கு வினாடிக்கு, 6,000 கனஅடி, குடிநீருக்கு, 600 கனஅடி என மொத்தம், 6,600 கனஅடி நீர் திறக்கப்பட்டது.ஒரு டி.எம்.சி., என்பது, 11,574 கனஅடியாகும். அணையில் இருந்து ஒரு நாளுக்கு, 6,000 கனஅடி வீதம் திறப்பதன் மூலம், நான்கு நாட்களுக்கு டெல்டா பாசனத்துக்கு தொடர்ச்சியாக நீர்திறக்கப்படும்.நீர்வரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்டமாக சம்பா சாகுபடிக்கு, 2 டி.எம்.சி., நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீர் பயன்பாடு, தேவையை பொறுத்து நீர்திறப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.