புது ஓய்வூதிய திட்டத்தில் 7,218 ஊழியர்: சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
சேலம்: ''சேலம் ரயில்வே கோட்டத்தில், 7,218 ஊழியர்கள், புது ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.இதுகுறித்து அவர், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. சேலம் ரயில்வே கோட்டத்தில், 8,763 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில், 7,218 பேர் புது ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், 25 ஆண்டு பணிபுரிந்தவர்களின் கடைசி, 12 ஆண்டு சராசரி அடிப்படை ஊதியத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக பெற முடியும். குடும்ப ஓய்வூதியமாக, அதில், 60 சதவீதம் பெறலாம்.'அம்ரித் பாரத்' திட்டத்தில் மேம்படுத்தப்படும் அனைத்து ஸ்டேஷன்களிலும், சோலார் மின் உற்பத்தி அமைக்கப்படுகிறது. டீசல் செட், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிலும் படிப்படியாக சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட முக்கிய ஸ்டேஷன்களில், 1,200 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.