| ADDED : பிப் 22, 2024 07:23 AM
சேலம் : சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் சித்ரா, 55. இவர் கடந்த, 15ல் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அணிந்திருந்த, 5 பவுன் சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், 18ல் ஜாமியா மஸ்ஜித்தை சேர்ந்த மெக்கானிக் சாகுல், 38, அவரது நண்பர் அஷ்ரப், 35, பைக்கில் சென்றபோது தீயணைப்பு நிலையம் அருகே கிடந்த, 5 பவுன் சங்கிலியை எடுத்து, டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர். அவர், இதுகுறித்து விசாரித்ததில், சித்ராவுக்கு உரியது என தெரிந்தது. நேற்று, அந்த சங்கிலியை, கமிஷனர் விஜயகுமாரி சித்ராவிடம் ஒப்படைத்தார். மேலும், போலீசில் ஒப்படைத்த சாகுல், அஷ்ரப் நேர்மையை பாராட்டி பரிசு வழங்கினார்.