உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குதிரைவாலி சாகுபடியில் கூடுதல் லாபம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேளாண் துறை

குதிரைவாலி சாகுபடியில் கூடுதல் லாபம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேளாண் துறை

பனமரத்துப்பட்டி: இயற்கை முறையில் குதிரைவாலி பயிரிட்டு விதையாக வேளாண் துறைக்கும், தோல் நீக்கிய அரிசியை மக்களுக்கும் விற்று விவசாயி லாபம் ஈட்டி வருகிறார்.பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டியை சேர்ந்த விவசாயி விஜயன், 48. இவர், இயற்கை முறையில் குறைந்த செலவில் பாரம்பரிய சிறுதானிய பயிரான குதிரைவாலி பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், கடந்த ஆண்டு மானியத்தில் விதை கொடுத்தனர். நாற்று விட்டு வயலில் நடவு செய்தேன். பூச்சி நோய் தாக்கம் மிக குறைவு என்பதால் மருந்து அடிக்க தேவையில்லை. ஒரு ஏக்கரில் பயிர் செய்ய, 30,000 ரூபாய் செலவானது. 100 நாளில், ஒரு ஏக்கரில், 1,500 கிலோ மகசூல் கிடைத்தது. தானியத்தை பாலீஷ் செய்யாமல் தோல் மட்டும் நீக்கி, கிலோ, 100 ரூபாய்க்கு விற்கிறேன், குதிரைவாலி அரிசி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளதால் வீடு தேடி வந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டும் ஒரு ஏக்கரில் நடவு செய்துள்ளதால், 1,500 கிலோ மகசூல் கிடைக்கும். வேளாண் அலுவலர்கள் அடிக்கடி வயலுக்கு வந்து ஆலோசனை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: தமிழக சிறுதானிய இயக்கம் சார்பில், பாரம்பரிய சிறுதானியங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, குதிரைவாலி பயிரிடுவதை ஊக்குவிக்கிறோம். குறுகிய காலத்தில், குறைந்த தண்ணீர் தேவையில் பூச்சி நோய் தாக்கமின்றி அதிக மகசூல் கொடுக்கிறது. விவசாயி விஜயனுக்கு மானியத்தில் விதை, நுண்ணுாட்டம், உயிர் உரம், சாகுபடி தொழில்நுட்பம் வழங்கினோம். விதை பண்ணை அமைத்து உற்பத்தி செய்த குதிரைவாலி விதையை, வேளாண்மை துறையிடம் விற்று கூடுதல் வருமானம் பெறுகிறார். குதிரைவாலி சாகுபடி வயலுக்கு, மற்ற விவசாயிகளை அழைத்து சென்று, நேரடியாக செயல் விளக்கம் அளிக்கிறோம். இதை பார்த்த விவசாயிகள் குதிரைவாலி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ