சேலம் : சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் மலைப்பகுதிகளான கல்வராயன்மலை, ஜவ்வாதுமலை, பச்சமலை மற்றும் கொளத்துார் பகுதிகளில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான கண்காணிப்பு பணிகள், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலை பகுதிகளிலிருந்து மற்ற மாவட்டங்களை இணைக்கும் தடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேவைப்படும் இடங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மலை கிராமங்களில் திருமணம், திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை, தொடர்புடைய துறையினர் முழுமையாக கண்காணிக்க வேண்டும். கள்ளச்சாராயம் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் உடனே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல், பதுக்கி வைத்தல் உள்ளிட்டவற்றில் யாரேனும் ஈடுபட்டால் உடனே போலீஸ் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக மக்கள், கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு, 0427 - -2452202, 0427 -- 1077 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 10581 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.மருத்துவ தேவை, ஆய்வு கூடங்களுக்கு மெத்தில் ஆல்கஹால், எத்தனால் உரிமம் வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும், வரம்பிற்குட்பட்டு மட்டும் பயன்படுத்துவதை கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க, போலீஸ், வருவாய், வனம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.எஸ்.பி., அருண்கபிலன், டி.ஆர்.ஓ., மேனகா, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி உள்பட, அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.