| ADDED : நவ 24, 2025 04:23 AM
பனமரத்துப்பட்டி,:பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 150 ஹெக்டேர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெற் பயிரில் இலையுறை கருகல் நோய் கட்டுப்பாடு குறித்து வேளாண் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் அறிக்கை:நெல் இலையுறை கருகல் நோய் பரவ அதிக ஈரப்பதம், மழை, அதிகமான தழைச்சத்து இடுதல், வடிகால் வசதியற்ற சூழல், நெருக்கமான நடவு ஆகியவை சாதகமான சூழலாக அமைகிறது. இது துார் கட்டும் பருவத்திலிருந்து கதிர் விடும் பருவம் வரை தாக்க வாய்ப்பு உள்ளது.ஆரம்பத்தில், இலையில் சாம்பல் நிற புள்ளிகள் தோன்றும். நடுப்பகுதி சாம்பலான வெள்ளை நிறமாகவும் அதன் ஓரங்கள் ஒழுங்கற்ற கரும்பழுப்பு அல்லது ஊதா பழுப்பு நிறமாக மாறிவிடும். பயிரின் அனைத்து இலைகளும் காய்ந்து விடும். இறுதியில் முழு பயிரும் இறக்க நேரிடும்.ஐம்பது சதவீதம் வரையில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ நெல் விதைக்கு, சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ், 10 கிராம் பயன்படுத்த வேண்டும். 8 சென்ட் நாற்றாங்கால் பரப்புக்கு 600 கிராம், நெற் பயிர் நடவு செய்த 30ம் நாள் ஒரு கிலோ வீதம் வயலில் இடவேண்டும்.ஒரு ஏக்கருக்கு ட்ரைசைக்ளசோல் (டபிள்யு பி) 200 கிராம், அசாக்ஸிடிராபின் (25சதவீதம் எஸ்சி) 200 மி.லி ஹெக்ஸகோனசோல் (75சதவீதம் டபிள்யு ஜி) 40 மி.கி., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லி 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.