கரும்பு வருவாயால் நலத்திட்ட உதவி வழங்கல் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ஈரோடு, கரும்பு விவசாய வருவாயால், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் நிலையில், கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:சர்க்கரை ஆலைகளுக்கு, விவசாயிகள் வழங்கும் கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரையின் அளவை கணக்கிட்டு, விலை வழங்கப்படுகிறது. கரும்பில் இருந்து அரவைக்கு பின் கிடைக்கும் மொலாசஸ், சக்கை, பிரஸ்மட் போன்றவை ஆலைகளில் இருந்து பெறப்படும் உபபொருட்களாகும். இவைகளுக்கு உண்டான தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பர்காவா கமிஷன், அரசுக்கு பரிந்துரை செய்து பல ஆண்டுகளாகிவிட்டது. தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது மூலம் ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இது முன்கதவு வழி வருவாயாகும். பின் கதவு வழி வருவாயாக மேலும், 50,000 கோடி மதுபான லாபியாக சென்று விடுகிறது. மது தயாரிப்புக்கான மூலப்பொருள் மொலாசஸ். இதற்கான தொகையை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதில்லை.அரசுக்கு கிடைக்கும் வருவாய் மூலமே, இன்று அனைத்து வகை நலத்திட்டங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு உப மூலப்பொருட்கள் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து, அரசு எதையும் வழங்கவில்லை என்பதே உண்மையாகும். சர்க்கரை தவிர பிற மூலப்பொருளின் வருவாயிலும், கரும்பு விவசாயிகளுக்கு பங்குத்தொகை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதில் பங்கு இல்லை என ஆலைகளும், அரசும் கூறுவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.