மல்டிலெவல் கார் பார்க்கிங் ஏலம் விடப்படாததால் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
சேலம், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' ஏலம் விடப்படாததால், மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலம் மாநகராட்சியில், சீர்மிகு நகர திட்டத்தில், 12.34 கோடி ரூபாய் மதிப்பில், ஆனந்தா பாலம் அருகே, 4 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் பேஸ்மென்ட், தரைத்தளத்தில், 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதல் மாடியில், 35 கார்கள் நிறுத்தும் வசதி, 2, 3, 4ம் தளங்களில் சேர்த்து, 580 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இது, சின்னக்கடை வீதி, முதல், இரண்டாம் அக்ரஹாரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்படி கட்டப்பட்டு, 2023 மார்ச்சில் திறக்கப்பட்டது. அதேபோல் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், இரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டி முடித்து, 3 ஆண்டுக்கு மேலாகிறது. இதற்கு பலமுறை டெண்டர் அறிவித்தும், குத்தகைதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் புது பஸ் ஸ்டாண்ட், மல்டிலெவல் கார் பார்க்கிங் ஏலம் எடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற கார் பார்க்கிங் கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டு, அதன் மதிப்புக்கேற்ப குறைந்தபட்ச ஒப்பந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஏலம் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதற்கு காரணம், 6 தளங்கள் நிரம்பும்படி, வாகனங்கள் நிறுத்துவதற்கான தேவை, அங்கு இல்லை. புது பஸ் ஸ்டாண்டில் வாகன நிறுத்தம் நிரம்புவதால், ஒரு வழியாக ஏலம் போய்விட்டது. மற்ற இரு மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டடத்துக்கு, தொகையை குறைத்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.