லாரி ஏற்றி கொல்ல முயற்சி; மேலும் 3 பேர் மீது வழக்கு
ஆத்துார்: ஆத்துார், அம்மம்பாளையம், நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி அனிதா, 36. இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரவி மனைவி அன்பரசிக்கும் இடையே, வீட்டின் எதிரே குப்பை கொட்டுதல், கான்கிரீட் சாலையில் கார் நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், அன்பரசியின் மகன் பூபதிக்கு ஆதரவாக, அவரது நண்பர் பாலமுருகன், லாரியை எடுத்து வந்து அனிதா வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த கார் மீது மோதினார். அப்போது லாரி முன் தடுக்க முயன்ற பெண்கள் உள்ளிட்டோர் மீது, லாரியை வேகமாக ஏற்ற வந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இதில் காயமடைந்த அனிதா, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, பாலமுருகன் மீது, ஆத்துார் ஊரக போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து நேற்று, அன்பரசி, பூபதி, உறவினர் கதிரவன் மீதும் கொலை முயற்சி, பொது சொத்து சேதம் உள்பட, 4 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.