பெரியார் பல்கலைக்கு விருது
ஓமலுார்,சிறந்த அறிவுசார் சொத்துரிமை பிரிவின் விருது, பெரியார் பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை அறிக்கை:பெரியார் பல்கலை, 2024 - 25ம் ஆண்டில், பல்கலையின் அறிவுசார் சொத்துரிமை பிரிவு நிலையான வளர்ச்சிக்காக, பல்கலை ஆய்வகங்களில் அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம், காப்புரிமை கலை, அறிவுசார் சொத்துரிமையில் தேர்ச்சி பெறுவதன் மூலம் புதுமை கருத்துக்களை, பாதுகாக்கப்பட்ட அறிவுசார் சொத்துகளாக மாற்றுதல் ஆகிய பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தது. இதன்மூலம், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பயனடைந்தனர். மேலும் மேற்கூறிய காலகட்டத்தில் பல்கலை, இந்திய அரசிடம் இருந்து பல்வேறு ஆராய்ச்சி பணிக்கு, 2 காப்புரிமை, 7 பதிப்புரிமைகளை பெற்றுள்ளன.இந்நிலையில் நேற்று முன்தினம், உயர்கல்வி நிறுவனங்களில் அறிவுசார் சொத்துரிமை பிரிவுகளின் மறு ஆய்வு கூட்டத்தின்போது, பெரியார் பல்கலை, சிறந்த அறிவுசார் சொத்துரிமை பிரிவின் விருதை பெற்றுள்ளது. விருதை, பல்கலை அறிவுசார் சொத்துரிமை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலிங் உறுப்பினர் செயலரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.