மதுக்கடைகளை அகற்ற பா.ஜ., ஆர்ப்பாட்டம்
சேலம்: பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், புது ரோடு அருகே உள்ள, 3 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, அதே பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் மதுவால் கணவரை இழந்ததை குறிப்பிடும்படி, 10 பெண்கள், விதவை கோலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் பா.ஜ., - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன் பேச்சு நடத்தி, ஓரிரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் மறியலை கைவிட்டனர். பின் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். கிழக்கு மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, வடக்கு ஒன்றிய தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.