காஷ்மீர் தாக்குதலை கண்டித்து சேலத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
சேலம்:காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கும், தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதத்தை கண்டித்தும், பா.ஜ.., சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர் தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசுகையில், 'பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் சக்திகளின் துாண்டுதலால், சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. அதற்கு காரணமான தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும் தி.மு.க., தேசம் முக்கியம் என கருத வேண்டும். இறந்தவர்களுக்கு பா.ஜ., சார்பில் அஞ்சலி செலுத்துவதற்கான பேனர் வைக்கக்கூட, போலீஸ் அனுமதிக்கவில்லை,'' என்றார். தொடர்ந்து, தீவிரவாதத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானை கண்டித்தும் கோஷமிட்டனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவகாமி, மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, துணைத்தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலர் செந்தில்குமார், பொருளாளர் ராஜ்குமார், வக்கீல் நாச்சிமுத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். * வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், பாகிஸ்தான் நாட்டின் கொடி தீ வைத்து எரிக்கப்பட்டது.மாவட்ட துணைத் தலை வர் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலர்கள் ராமச்சந்திரன், ராஜா, ராஜேந்திரன், குமார், மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட செயலர்கள் ருத்ரம்மாள், பிரபாகரன், அலுவலக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாழப்பாடி தெற்கு ஒன்றிய தலைவர் நெப்போலியன் நன்றி கூறினார்.