வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு
சேலம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், மோட்டார் வாகன ஆய்வாளர், அவரது கணவர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில், மோட்டார் வாகன(நிலை 1) ஆய்வாளராக பணியாற்றியவர் மீனாகுமாரி, 43. தற்போது சென்னை தெற்கு பிரிவு, பறக்கும் படையில் உள்ளார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. அதன் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் போலீசார் விசாரித்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள, மீனாகுமாரி வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அதில் அசையும், அசையா சொத்து என, வருமானத்துக்கு அதிகமாக, 60 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீனாகுமாரி, அவரது கணவர் சுதர்சன் மீது, கடந்த, 12ல், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுதர்சன், தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.