தமிழ் பேராசிரியர் மீதான புகார் பெரியார் பல்கலையில் விசாரணை
ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை தமிழ் துறை பேராசிரியர் பெரியசாமி. இவர் பணியில் சேரும் போது, போலி அனுபவ சான்று வழங்கியதாகவும், போலி ரசீது வழங்கி பல்கலைக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும், துறைத்தலைவராக இருந்த காலத்தில், உடன் பணியாற்றிய ஆசிரியர்களை இழிவாக திட்டியதாகவும், துறை சார்ந்த மாணவர்களும், பல புகார்களை தமிழக அரசு, உயர்கல்வித்துறைக்கு அனுப்பியிருந்தனர். பல்கலை தொழிலாளர் சங்கத்தினரும் புகார் அனுப்பியிருந்தனர்.இதனால் ஓய்வு பெற்றவரான, தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன் மணியன், சிண்டிகேட் உறுப்பினர்களான கிருஷ்ணவேனி, வெங்கடாசலம் ஆகியோர் விசாரணை குழுக்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று பல்கலையில், பெரியசாமி மீது புகார் அளித்தவர்களிடம் விசாரித்து, ஆவணங்களை பெற்றனர். 2ம் நாளாக இன்று, எம்.ஏ., தமிழ்த்துறை மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது. இதில் பெரியசாமி ஆஜராக கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் நேற்று முதலே, அவர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.