டெண்டர்களை புறக்கணிக்கஒப்பந்ததாரர்கள் முடிவு
சேலம்:சேலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்க அவசர கூட்டம், அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது. செயலர் ராஜூ தலைமை வகித்தார். அதில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, எதிர் வரும் அனைத்து டெண்டர்களிலும் பங்கேற்காமல் புறக்கணிப்பது, கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க, தமிழக அரசிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் காமராஜ், பொருளாளர் முரளி, ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து ராஜூ கூறியதாவது: ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை, ஒரு வாரத்தில், 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 6 மாதங்களுக்கு முன், 2,200 ரூபாயாக இருந்த ஜல்லி விலை, 5,000 ரூபாயாகவும், 3,000 ஆக இருந்த எம்.சாண்ட், 6,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அரசு டெண்டர் மதிப்பீடு குறைவாக உள்ளதால், ஒப்பந்தம் எடுத்து செய்தால் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சேலம் மாநகராட்சியின் அனைத்து ஒப்பந்தங்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.