| ADDED : மே 03, 2024 06:46 AM
வீரபாண்டி : சேலம், காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டியில் உள்ள பண்ணை குல பங்காளிகளின் குல தெய்வமான எட்டுக்கை அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்., 23ல் தொடங்கியது. நேற்று பொங்கல் விழா நடந்தது. இதற்கு காலை, 7:00 மணிக்கு முதலில் அரண்மனை பொங்கல், 9:00 மணிக்கு குதிரை துலுக்க விடுதல், 10:00 மணிக்கு சக்தி அழைத்தல் ஊர்வலத்தை தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், கோவில் முன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சிலர் வேண்டுதலுக்கு மொட்டை அடித்துக்கொண்டனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ரூபாய் நோட்டு மாலைகள் சார்த்தி பூஜை செய்யப்பட்டது. அதேபோல் ராக்கிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. இதற்கு நடந்த சக்தி அழைத்தல் ஊர்வலத்தில், திரளான பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.