மடிக்கணினி கொடுக்காததால் தி.மு.க., வீட்டுக்கு செல்வது உறுதி
இளம்பிள்ளை :முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 117வது பிறந்தநாளை ஒட்டி, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், இளம்பிள்ளையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கைத்தறி பிரிவு செயலர் வினோத் தலைமை வகித்தார்.அதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசியதாவது: பொதுச்செயலர், இ.பி.எஸ்., அமெரிக்கா சென்றபோது, ஒரு அரங்கில், 1,000 பேர் மடிக்கணினியுடன் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவர்கள், இ.பி.எஸ்.,சை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து சென்று பணிபுரிபவர்கள் என்று. அதில், 500க்கும் மேற்பட்டோர், இலவச மடிக்கணிணி திட்டத்தால் அமெரிக்காவுக்கு வேலைக்கு வந்தோம் என்றனர். அதனால், மடிக்கணினி கொடுக்காததால், தி.மு.க., வீட்டுக்கு செல்வது உறுதி. அதேநேரம், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி, சட்டம் ஒழுங்கை காப்பாற்றிய இ.பி.எஸ்., கோட்டைக்கு செல்வது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஒன்றிய செயலர்களான, வீரபாண்டி கிழக்கு வெங்கடேசன், மேற்கு வரதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.