சேலம்: சேலம் வீரபாண்டி ஒன்றியம், கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் கண்ணகி, 55. இவரது மகன் பிரவீன்குமார், 35. இவர்கள் இருவரும் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதன்பின், கண்ணகி கூறியதாவது:என் மகன் பிரவீன்குமார், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு மின்வாரியத்தில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி, இரு ஆண்டுகளுக்கு முன், சேலம் சீலநாயக்கன்பட்டி அழகுநகரை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் ஸ்ரீதர், 50, என்பவர் ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, 8 லட்ச ரூபாய் கொடுத்தேன். அதற்கான ஆதாரம் உள்ளது. ஆனால் தற்போது வரை, அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் மிரட்டி வருகிறார். இதற்கு சேகர் என்பவர் உடந்தையாக இருந்தார். இது தொடர்பாக, பனமரத்துப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பணத்தை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.இது குறித்து தி.மு.க., பிரமுகர் ஸ்ரீதர் கூறுகையில்,'' நான் தி.மு.க., பிரமுகர்தான். ஆனால் எந்த பதவியிலும் இல்லை. எனினும், சேலம் மாநகராட்சியில் டிரைவர் வேலை வாங்கி கொடுத்தேன். 12 மாதம் வேலை செய்து சம்பளம் வாங்கியவர், அதன்பின் வேலை பிடிக்கவில்லையென கூறி, திரும்பி வந்துவிட்டார். அதனால் வாங்கிய, நான்கு லட்ச ரூபாயை திருப்பி கொடுத்து விட்டேன். இந்த தகவலை பனமரத்துப்பட்டி போலீசுக்கும் தெரியப்படுத்தி, கண்ணகிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டேன்,'' என்றார்.