தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி டிரைவர் பலி
சேலம்:நாமக்கல் மாவட்டம் மின்னக்கல்லை சேர்ந்தவர் செல்வ பிரியன், 45. இவர் நேற்று இரவு, சேலம் நோக்கி, 'சான்ட்ரோ' காரில் வந்துகொண்டிருந்தார். இரவு, 10:50 மணிக்கு, சேலம் மாவட்டம் வீரபாண்டியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே, சேலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த அரசு பஸ் டிரைவர், கார் மீது மோதாமல் இருக்க திருப்பினார். அதில் பஸ், சாலையோர புளியமரத்தில் மோதியது. இதனிடையே காரும், அருகே உள்ள மற்றொரு புளிய மரத்தில் மோதியது. இதில் கார் நொறுங்கியது. செல்வபிரியன் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ் டிரைவரும் படுகாயம் அடைந்தார். பயணியர் சிலர் லேசான காயம் அடைந்தனர். அதன்படி, 11 பேரை, அப்பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.