சேலத்தில் விடிய விடிய மழை தலைவாசலில் வீடு இடிந்து சேதம்
சேலம், சேலம் மாநகரில் நேற்று முன்தினம் மாலை, கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கி, சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இரவு, 7:00 முதல் தொடங்கிய மழை, 2 மணி நேரமாக கன மழையாக கொட்டியது. ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக கிச்சிப்பாளையம் பிரதான சாலை, தாதுபாய்குட்டை, அம்மாபேட்டை, மிலிட்டரி சாலை, சீலநாயக்கன்பட்டி, நெத்திமேடு, அஸ்தம்பட்டி, சாரதா கல்லுாரி சாலை, புது பஸ் ஸ்டாண்ட் உள்பட, மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலையில் ஓடியதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அதிலும் கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வீடுகளில் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர். ஏற்காட்டில் பெய்த மழையால் இரவு முழுதும் குளிர்ந்த சூழல் நிலவியது. அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை நீடித்து நேற்று காலை வரை சாரல் மழையாக பெய்தது.அதிகபட்சமாக சேலத்தில், 45.6 மி.மி., பதிவானது. அதேபோல் மேட்டூர், 44.4, நத்தக்கரை, 42, இடைப்பாடி, 27, வீரகனுார், 25, கெங்கவல்லி, தம்மம்பட்டி தலா, 20, ஏற்காடு, 19.2, ஓமலுார், 18, வாழப்பாடி, 13, சங்ககிரி, 12.1, ஆனைமடுவு, 8, டேனிஷ்பேட்டை, 7, ஆத்துார், 4, கரியகோவில், 3, ஏத்தாப்பூர், 2 மி.மி., என மழை பதிவானது.தலைவாசல், கோவிந்தம்பாளையம் ஊராட்சி, தெற்குமேட்டை சேர்ந்த பெருமாள், 55, ஓட்டு வில்லை வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், அவரது ஓட்டு வீடு முழுதும் இடிந்து விழுந்தது. அதன் சேதம் குறித்து, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.வீடுகளில் புகுந்த மழைநீரால் மறியல்தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காட்டில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தொடங்கிய மழை, 10:00 மணி வரை பெய்தது. இதனால் அப்பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி, சாலையை கடந்து அருகே உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் இரவு முழுதும் அவதிப்பட்ட மக்கள் நேற்று காலை, 10:15 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் கட்டை, கல் வைத்து மறியலில் ஈடுபட்டனர். சாலை இருபுறமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், அங்கு வந்த தாரமங்கலம் போலீசார், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால், 11:15 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.