உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு புகுந்து முதிய தம்பதி வெட்டி கொலை; சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்

வீடு புகுந்து முதிய தம்பதி வெட்டி கொலை; சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்

சேலம் : சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து முதிய தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 70; வீட்டில் மளிகை கடை நடத்துகிறார். இவரது மனைவி வித்யா, 65. இவர்களின் மூத்த மகன் ராமநாதன், 45. இளைய மகன் வாசுதேவன், 43. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராமநாதன், அருகே உள்ள தர்மன் நகரில் வசிக்கிறார். மருந்து விற்பனை தொழில் செய்கிறார். வாசுதேவன், பாஸ்கரன் வீட்டின் மேல் பகுதியில் வசித்து, பால் வினியோகம் தொழில் செய்கிறார்.நேற்று மதியம், 3:30 மணிக்கு, பாஸ்கரன் கடையை திறந்து வைத்து விட்டு வீட்டில் வித்யா உடன் இருந்தார். அப்போது கீழ் வீட்டில் இருந்து சத்தம் கேட்டதால், வாசுதேவன் உடனே மாடியில் இருந்து இறங்கி வந்து பார்த்தார்.அப்போது, வித்யா வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். பாஸ்கரன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், பாஸ்கரனை சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார். ஆனாலும், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்த போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் சூரமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரித்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்பகுதி 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். போலீசார் கூறுகையில், 'வித்யா தலையில் மூன்று இடங்களில் ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளது. மூளை வெளியே வந்த நிலையில் இறந்து கிடந்தார். பாஸ்கரன் தலையிலும் வெட்டப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் இறந்தார். சொத்து பிரச்னையா, நகை பறிக்க கொலையா, முன் விரோதமா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது' என்றனர்.கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதில், துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து முதிய தம்பதி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

, பழம்

தம்பதியின் மூத்த மகன் ராமநாதன் கூறுகையில், ''தந்தைக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தோம்.''இன்று பழனி செல்ல திட்டமிட்டு, பழம், பூ வாங்கி வைத்திருந்தோம். அதில் எல்லாம் ரத்தம் படிந்துள்ளது.''அடுத்த மாதம் பெற்றோருக்கு, 70வது வயது திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது. 16 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !